Monday 27 April 2015

சீக்கியர்கள் vs தமிழர்கள்

அபியும் நானும் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும் அதில் தலைவாசல் விஜய் சொல்லுவார். "வண்டி ஓட்டிய சீக்கிய taxi driver ஐ நான் கேலி செய்தேன். அப்போது அவர் என்னிடம் 1ரூபாய் நாணயத்தை கொடுத்து நீங்கள் முதலில் சந்திக்கும் சீக்கிய பிச்சைக்காரனிடம் இந்த நாணயத்தை போடுங்கள் என்றார். நான் சீக்கிய பிச்சைகாரனை தேடிக்கொண்டு இருக்கிறேன். இன்னும் அந்த 1 ரூபாய் நாணயம் என்னிடமே இருக்கிறது" என்று.
தன் இனத்தில் ஒரு பிச்சைக்காரன் கூட இல்லை என்ற பெருமை சீக்கியர்களுக்கு இருக்கிறது.
தமிழனுக்கு இருக்கிறதா?

பிச்சைக்காரர்களை பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றும். 
இவர்கள் என்ன பாவம் செய்தார்களோ இப்படி பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள்.
கை,கால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு. பிறகு ஏன் பிச்சை எடுக்கிறார்கள்?
இவர்களுக்கு பிச்சை போட்டால் நமக்கு புண்ணியம் கிடைக்கும். அது போதும் நாம் புண்ணியம் சேர்க்க.
இவர்களை பிச்சை எடுக்க வைத்து ஒரு கூட்டம் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறதோ?

2000 ஆண்டில் சில வாரங்கள் நண்பன் அசோக்கோடு விஜயவாடாவில் தங்கி இருந்தேன். அப்போது அங்கிருந்தவர்கள் சொன்னது என் மனதில் முள்ளாக தைத்தது. 
"விஜயவாடாவில் பிச்சை எடுப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் தான். தெலுங்கர்கள் அல்ல" என்று.

இந்துத்துவா என்று பேசும் இந்து அமைப்புகள் யாராவது கோவில்களில் இந்துக்கள் பிச்சை எடுக்கிறார்களே. அவர்கள் நிலையை மாற்ற வேண்டாமா என்று யோசித்து இருக்கிறார்களா? கடவுள் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றவேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள். இந்துக்கள் பிச்சை எடுத்தால் இவர்களுக்கென்ன? 
பெரும்பாலான இந்துக்களுக்கு ஒரே எண்ணம் தான். "பிச்சை போட்டால் நமக்கு புண்ணியம் கிடைக்கும்".

யாராவது பிரபல நடிகர் அல்லது நடிகை இஸ்லாம் மதத்திற்கு மாறினால் அதை பெருமையாக பேசும் இஸ்லாம் அமைப்புகளோ, இஸ்லாமியர்களோ தங்கள் தொழுகைக்கு செல்லும் பள்ளிவாசல், தர்காவில் இஸ்லாமியர்கள் சிலர் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் நிலையை மாற்றவேண்டும். இஸ்லாமியர்களில் பிச்சைக்காரர்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறார்களா?

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக கோடி கோடியாக பலர் இந்தியாவிற்கு பணம் அனுப்புகிறார்கள். மதத்தை பரப்புகிறேன் என்று கூறி அந்த பணத்தை ஆட்டைய போடும் கும்பல் தான் அதிகம் சுற்றுகிறதே தவிர, எந்த ஒரு கிறிஸ்தவ அமைப்பும், சர்ச்களில் பிச்சை எடுக்கும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் நிலையை மாற்றவேண்டும்.கிறிஸ்தவர்களில்  பிச்சைக்காரர்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறார்களா?

ஓ இது தான் சேதியா?
அப்போ சீக்கிரமே சீக்கியர்களில் பிச்சை எடுப்பவர்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கொடூர மனம் கொண்டவர் என்று அர்த்தம்.
2 ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பன் மணிமாறன் வீட்டு கிரகபிரவேசத்திற்க்கு சென்றிருந்தேன். அவன் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு இருக்கிறான். அவனோடு வேலை பார்க்கும் சிலர் வந்திருந்தார்கள். அவனுடைய நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் target achieve செய்பவர்களின் புகைப்படங்கள் அந்த அலுவலகத்தில் மாட்டி இருப்பார்கள். அதைப்பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தது என் காதில் விழுந்தது. 
"என்ன சார் அந்த போட்டோ மட்டும் ரொம்ப மாசமா இருக்கே. என்ன செய்யலாம்."
"கவலைய விடுங்க. சீக்கிரமே போட்டோவுக்கு மாலைய போட்ருவோம்".
"வாய கழுவுங்க சார்"
சற்று யோசித்து பாருங்கள். target பிரஷர் இவர்களை இப்படி கூட யோசிக்க வைக்கிறது. 

ஒருவன் முன்னேறுகிறான் என்றால் நாமும் முன்னேற நினைக்க வேண்டுமே தவிர அவனை அழிக்க நினைத்தாலோ, அல்லது அவனை நம் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாலோ அது அழிவை மட்டுமே தரும்.

இன்னும் 10 ஆண்டுகளுக்கு உள்ளாக நம் தமிழ் இனத்தில் பிச்சைக்காரகள் இல்லாத இனமாக மாற்ற ஏதாவது செய்வோம். 
பிச்சைக்காரர்கள் இல்லாமல் போய் விட்டால் பிறகு நான் எப்படி புண்ணியம் சேர்ப்பது என்று மட்டும் யோசித்து விடாதீர்கள். 

No comments:

Post a Comment